அமரர் ரோஜா முத்தையா 50,000 நூல்களும் இதழ்கள், திருமண அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், துண்டறிக்கைகள் போன்ற பிற 50,000 ஆவணங்களையும் சேகரித்திருந்தார். அவர் நினைவாக இந்நூலகத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா, எழுத்துப் பலகை எழுதும் ஓவியராவார். 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட அவரது அகால மரணத்திற்குப் பிறகு, அவரது சேகரிப்பைக் காப்பாற்ற உலகளாவிய முயற்சியை சிகாகோ பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அச்சேகரிப்புகள் சென்னைக்கு மாற்றப்பட்டு, 1994ஆம் ஆண்டு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இச்சேகரிப்பைப் பராமரிப்பதற்கான சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது, தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, நூலகம் விரிவுப்படுத்தப்பட்டது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பல நூல் பாதுகாப்புத் திட்டங்களை - National Endowment for the Humanities, Ford Foundation, Wellcome Trust for the History of Understanding Medicine, Endangered Archives Project, TATA Trusts, India Foundation for the Arts, National Archives of India, Tamil Nadu Government உள்ளிட்ட நிறுவனங்களுடனும் சில தனிநபர்களுடனும் இணைந்து மேற்கொண்டது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சேகரிப்பு, நூல்பட்டியல், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளிலிருந்து நூல்களை எண்ணிமமாக்குதல், பொது ஆய்வுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தன்னை விரிவாக்கியது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 2007ஆம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தையும் 2021ஆம் ஆண்டு பொதுவியல் ஆய்வு மையத்தையும் நிறுவியது.
தற்போது தமிழ்நாடு அரசால் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் சில முக்கிய நூலகச் செயல்பாடுகளைத் தக்கவைக்க 2023 முதல் தொடர் மானியங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தமிழின் மரபார்ந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, அறிவுசார் விவாதத்திற்கு பொதுதளத்தில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் செயல்படுகிறது. இந்நூலகம் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறந்த முறைமைகளை உருவாக்கியும் மேற்கொண்டும் வருகிறது.