Banner
தமிழ் அறிவு வளாகம்
தமிழ் அறிவு வளாகம் - ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முன்னெடுப்பு
தனது 30 ஆண்டுகால அனுபவத்துடன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மறுதகவமைத்துக் கொண்டு வருகிறது. இம்முயற்சியின் பகுதியாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அனைத்து செயல்பாடுகளும் உள்ளடக்கிய ஒரு தமிழ் அறிவு வளாகம் உருவாக்கப்படும். இச்செயல்பாடு நிறைவுபெற இரண்டு ஆண்டுகளும் ஆகும். முன்மொழியப்பட்ட கட்டிடத்தின் கிழக்குப் பகுதியின் மாதிரி வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிவு வளாகக் கட்டத்தின் மாதிரி வடிவம்
நூலகச் செயல்பாடுகள், நூல் பாதுகாப்பு, அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, தமிழ் அறிவு வளாக மேம்பாட்டுப் பேரவை எனும் அமைப்பை தமிழ் அறிவு வளாகம் உருவாக்கியுள்ளது. இப்பேரவை பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்.
தமிழ் அறிவு வளாக மேம்பாட்டுப் பேரவையின் செயல்பாடுகள்
  • தமிழ்ப் பண்பாடு மரபு மற்றும் கலைசார்ந்த அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுக்கும்.
  • நூல்கள் ஆவணங்கள் கலை மற்றும் பழங்குப் பொருட்களைச் சேகரித்தல், பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல், அதன் ஆயுட்காலத்தை நீட்டித்தல், இவற்றைக் கொண்டு புதிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல், வழிகாட்டுதல், அறிவைப் பரவலாக்கம் செய்தல் முதலியவற்றை மேற்கொள்ளும்.
  • கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகள், கல்விசார்ந்த செயல்பாடுகள். கலைச்சார்ந்த செயல்பாடுகள் முதலியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். இவை தனித்தும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படும்.
  • பிற நாடுகளில் உள்ள தமிழ் அறிவு மற்றும் கலைச் செல்வங்களை ஆவணப்படுத்தல், மின்னாக்கம் செய்தல், புதிய தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தல் முதலிய பணிகளை இப்பேரவை மேற்கொள்ளும்.
  • தொல்லியல், வரலாறு, அறிவியல், தமிழ்க் கணினியியல், மொழியியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியவியல் முதலியவற்றில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள இப்பேரவை ஊக்குவிக்கும்.
  • தமிழ் மொழியைக் கற்பித்தல் மற்றும் அறிவியல் தமிழ்க் கல்விச் செயல்பாடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றையும் இவையல்லாத தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த பிறவற்றையும் இப்பேரவை மேற்கொள்ளும்.
  • புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து, தமிழ்ப் பண்பாட்டை உலக அரங்கில் காட்சிப்படுத்தவும் தமிழ் அறிவுச் செல்வத்தை உலக அரங்கில் வெளிக்காட்டவும் அதன்வழி உலக அரங்கில் தமிழரின் இருத்தலை நிலைநிறுத்தவும் 'தமிழ் அறிவு வளாக மேம்பாட்டுப் பேரவை' முன்நின்று செயல்படும்.
பேரவையின் அமைப்பு
  • இப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் ஊக்கத்தோடு பங்குபெறுதல், பரந்த நோக்கோடு செயல்படுதல், உரிமையோடு பேரவையைத் தங்களின் பெருமைமிகு அடையாளமாகக் கருதுதல் முதலியவற்றை உறுதிசெய்கிறது.
  • இது அரசியல் சார்பற்ற ஓர் அமைப்பாக உருவாக்கப்படுவதால் நேரடியான அரசியலாளர்கள் உறுப்பினராகப் பங்கேற்பது தவிர்க்கப்படும்.
  • ஒவ்வொரு நாட்டிற்கும் பேரவை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட நாட்டில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்தும் தேவைக் கருதியும் ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.