ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பதிப்புப் பணி 2019ஆம் ஆண்டு ‘Journey of a Civilization: Indus to Vaigai’இன் வெளியீட்டில் தொடங்கியது. இந்நூலின் தமிழ்ப் பதிப்பு, ‘ஒரு பண்பாட்டின் பயண்ம்: சிந்து முதல் வைகை வரை’ 2023-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டது. 1812-ஆம் ஆண்டு அச்சேறிய தமிழின் முதல் செவ்வியல் நூலான திருக்குறள் சேகரிப்பாளர்கள் பதிப்பாக மீள்பதிப்பு கண்டுள்ளது. 1835ஆம் ஆண்டு வெளிவந்த மெக்காலே அறிக்கையின் தமிழாக்கம், ‘நவீன கல்விக் கொள்கையை நோக்கி… மெக்காலே கூறியது என்ன?’ என்ற நூலையும் நூலகம் வெளியிட்டுள்ளது.இன-இசையியல் வல்லுநரான யோஷிடகா தெரடா, டி.என். ராஜரத்தினம் பிள்ளை குறித்து மேற்கொண்ட ஆய்வை Speaking Tiger பதிப்பகத்துடன் இணைந்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூலாக வெளியிட்டது. பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. மேலும் களம் இலக்கிய அமைப்பு, பாரதி புத்தகாலயம் ஆகியவற்றுடன் இணைந்து, ‘கடவுள் ஆயினும் ஆக’, ‘அணி நடை எருமை’, ‘ஓர் ஏர் உழவன்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது. நூலகம், தமிழ்ப் பண்பாடு தொடர்பான மிக முக்கியமான வெளியீடுகளையும் நூலக ஆய்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளையும் நூல்களாக வெளியிடும்.