ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் MARC21 என்னும் சர்வதேச தரத்துடன் நூலகத்தில் உள்ள அனைத்து தமிழ் ஆவணங்களையும் ஆவணப்படுத்தி வருகிறது. மேலும் தெற்காசிய ஒருங்கிணைந்த நூல்பட்டியல், வேர்ல்ட் கேட் (WorldCat) ஆகியவற்றில் தமிழ் நூல்பட்டியலைப் பதிந்து வருகிறது. தமிழ் இதழ்களில் இருந்து இலக்கியம், உள்ளூர் மருத்துவம், சமயம், நாட்டார் வழக்காற்றியல், வெகுசனப் பண்பாடு, உளவியல், காந்திய ஆய்வுகள், பாலின ஆய்வுகள், நவீன வரலாறு உள்ளிட்டவற்றைக் குறித்த 1,60,000 கட்டுரைகளை அட்டவணைப் படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் உதவியுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூல்பட்டியலை உருவாக்கியுள்ளது. இத்துடன், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தனிநபர்கள், நிறுவனங்கள் சேகரிப்புகளையும் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நூலகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், போடலியன் நூலகம், சில தனியார் சேகரிப்புகள் உள்ளிட்டவற்றோடு பல சேகரிப்புகளை அட்டவணைப்படுத்தி, நூல்பட்டியலை உருவாக்கியுள்ளது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் நோக்கங்களில் முக்கியமானது, அடுத்த தலைமுறையினருக்காக அதன் சேகரிப்புகளைப் பாதுகாப்பதாகும். இத்துடன், நூலகம் கவனம் செலுத்தும் மற்றொரு முக்கிய அம்சங்களில் ஒன்று, மாற்று வடிவங்களில் ஆவணங்களைப் பாதுகாப்பதாகும். நூலகம், அதன் சேகரிப்புகளை நுண்படம் மூலமும் எண்ணிமமாக்குதல் மூலமும் முறையாக ஆவணப்படுத்தி பாதுகாத்து வருகிறது. ஆவணமாக்கலில் நுண்பட முறை நிறுத்தப்பட்டு, எண்ணிமமாக்குதல் முறை மேற்கொள்ளப்படுவதால், அதிலும், நூலகம் ஆவணங்களைப் பாதுகாக்க, பல்வேறு அதிநவீனக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இத்துடன், நூலகத்தில் நுண்படச் சேகரிப்புகளைப் பாதுகாக்க 24 மணிநேரமும் 35% ஈரப்பதம், 18° செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பிரத்யேக சேமிப்பகத்துடன் கூடிய வசதியும் உள்ளது. உலகத்தரத்தில் சிறந்த நடைமுறையாக மேற்கொள்ளப்படும் மெத்திலீன் ப்ளூ டெஸ்ட் போன்ற தரத்தில் இந்நூலகத்தின் நுண்படச் சேகரிப்பகம் அமைந்துள்ளது. மேலும், நூலகம் கையெழுத்துப் பிரதிகளை நவீன தன்மையில் மறுசீரமைக்கும் முறையிலும் ஈடுபட்டுள்ளது. கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகளின் மறுசீரமைப்பும் திருக்குறளின் முதல் பதிப்பும் இந்தத் துறையில் நூலகத்தின் நிபுணத்துவத்திற்கு சான்றாகும்.
2015 ஆம் ஆண்டில், சேதமடைந்த அரிய ஆவணங்களை, அதே பொருள்சார்ந்த தன்மையில் பாதுகாக்க, டாடா அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முழு அளவிலான நூல் பாதுகாப்புக் கூடத்தை நூலகம் உருவாக்கியது. இது வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற பாதுகாப்பு முறைகளைக் கொண்டு உருவாக்கியுள்ளது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பக்கங்களுக்கு மேலான அரிய தமிழ் நூல்கள், பருவ இதழ்களைப் பாதுகாத்துள்ளது. நூலகம் உருவாக்கிய, ‘நூல் தத்தெடுத்தல்’ திட்டத்தின்மூலம் புரவலர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நூலைப் பாதுகாக்க ரூபாய் 5000/- செலவாகும் (இது சராசரி தொகை, பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இத்தொகை மாறுபடும்). தனிநபர்களும் பெரு நிறுவனங்களும் இத்திட்டத்தில் எங்களுடன் இணைய முன்வந்துள்ளனர். செப்டம்பர் 2024 வரை, 2000 நூல்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவில் நூல் பேணிப் பாதுகாத்தல் துறையில் பல முதன்மையான நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் நூலகம் செயல்பட்டு வருகிறது.
