Banner
சிந்துவெளி ஆய்வு மையம்
சிந்துவெளி ஆய்வு மையம் ஹரப்பா அல்லது சிந்துவெளிப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி, குறிப்பாக, இன்னும் விளக்கப்படாமல் உள்ள சிந்துவெளி எழுத்துக்களைப் பற்ற அறிவியல்ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்கிறது. இம்மையம் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவரே இதன் முதல் மதிப்புறு ஆலோசகர் ஆவார். அவருக்கு பிறகு, இதன் மதிப்புறு ஆலோசகராக ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். செயல்படுகிறார்.
சிந்துவெளி ஆய்வு மையம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சென்னை கணித அறிவியல் நிறுவனம், சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்துடன் ஓர் ஆய்விதழை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட சிந்துவெளி தொடரடைவை (1977) இணையச்செயலியாக மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் indusscript.in என்ற தளத்தில் வெளியிட்டுள்ளது. இது சிந்துவெளி அறிஞர்கள், ஆர்வமுள்ள நபர்களுக்கு சிந்துவெளி எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் திறந்தநிலை இணையக் கருவியாகச் செயல்படுகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் அனைத்து அறிஞர்களுக்கும் சிந்துவெளி ஆய்வு மையம் எப்போதும் உதவுதறகு தயாராக இருக்கும்.
ஐராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகளை எங்கள் மின்நூலகத்தில் வாசிக்கலாம்.
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' நூல் சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளான இந்திய வரலாற்றில் சிறிதும் புரிந்து கொள்ளப்படாத காலகட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது.
- டோனி ஜோசப், 'ஆதி இந்தியர்கள்' நூலின் ஆசிரியர்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், ஆர். பாலகிருஷ்ணனின் மகத்தான படைப்பான ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூலின் ஆங்கிலப் பதிப்பை 2019ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த நூல் இந்தியவியல் புதிர்களோடு தொடர்புடைய சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட மொழி பேசும் மக்களின் தோற்றம் குறிப்பாக பண்டைய தமிழ் மரபுகள் முதலியவற்றின் அடிப்படைக் காரணங்களை இணைக்கும் புள்ளிகளை நிறுவ முயல்கிறது.